வேளாங்கண்ணி

‘பாசிலிக்கா ஆஃப் அவர் லேடி ஆஃப் குட் ஹெல்த்’.

கடலோரத்தில் அமைந்திருக்கும் ரோமன் கத்தோலிக்க கோயில். வேளாங்கண்ணி என்பது “வேலை” என்கிற ஊரின் கன்னிப்பெண் என்று பொருள் கூறுகின்றனர். மூன்று அற்புதங்கள் நிகழ்ந்த பிறகு இந்தக் கோயில் நிறுவப்பட்டது. இன்னமும், இந்தக் கோயிலுக்குச் சென்றால், அற்புதங்கள் பற்றி நிறைய பேசுகின்றனர்.

வெள்ளை வெளேர் என்ற பளிச் கோபுரம், புதிதாக சலவை செய்தது போல்! கட்டிடத்தின் நவீனமும் நேர்த்தியும் நம்மை வெகுவாகக் கவர்கின்றன. வருஷம் இரண்டாயிரத்து நாலில் ஏற்பட்ட ‘சுனாமி’யினால் மிகவும் பாதிப்படைந்த இடம் வேளாங்கண்ணி என்று நினைவுக்கு வரும்போது மனதில் ஒரு பெரிய அழுத்தம். அலை மோதும் கூட்டம்; எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம்; சுற்றிலும் சிறிய பெரிய கடைகள்; உணவகங்கள்; பல தரப்பட்ட மக்கள்; தென்னை நாற்றுகளுடன், தூக்க மாட்டாமல் தூக்கிக்கொண்டு, கையில் குழந்தை, சாமான்களுடன் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தவர்கள்.

அனைத்து சமூகத்தினரும், குறிப்பாக, ஹிந்துக்கள், நிறைய அளவில் வருகை தரும் விசேஷமான கோயில். பழைய கோவில் ஒருபுறம் இருக்க, புதியதாக கடலுக்கு மிக அருகில் கோயில் எழுப்பியிருக்கிறார்கள். ஹிந்துக்களின் சடங்கான ‘அர்ச்சனை’த் தட்டு - தேங்காய், புஷ்பம் உட்பட, நிறைய பக்தர்கள் எடுத்துச் சென்று மாதாவிற்கு அர்ச்சனை செய்து மகிழ்கிறார்கள். மாதாவின் ஆசி பெற்ற தேங்காய் எண்ணெய் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற தேவாலயங்களை போல் இங்கும் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் - வண்டி நிறுத்துவதற்கு உட்பட - எதற்கும் கட்டணம் கிடையாது. அங்கங்கே உண்டியல் வைத்திருக்கிறார்கள். விருப்பப்பட்டால் காணிக்கை செலுத்தலாம். இந்தக் கோயிலைச் சுற்றிய கதைகள் எல்லாம் அற்புத நிகழ்ச்சிகளைப் பற்றியவைதான். இந்தக் கோயிலுக்கு வந்திருப்பவர்களும் அங்கிருக்கும் கன்னிகாஸ்திரீகளும் நிறைய அற்புதங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். பத்மா என்னிடம் கேட்டாள், “கடவுளின் மீது வைக்கும் நம்பிக்கைக்கு அற்புதங்கள்தான் காரணம் என்றால், அந்த நம்பிக்கைக்கு அர்த்தம் உண்டா?” சரியான கேள்விதான். ‘லாஜிக்’கான பதில்தான் இல்லை. ஆனால், அன்றாடத் தேவைகளை அடைவதே ஒரு போராட்டமாக இருக்கும் நிலையில் நாம் இருந்தால், நம் வாழ்விலும் ஓர் அற்புதத்திற்காகக் காத்திருப்போமோ என்னவோ?

வேளாங்கண்ணி கோயில், பொருளாதார ரீதியில், நிறையக் கூட்டத்தை வசீகரிக்கிறது. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் தேவைகள், பிரார்த்தனைகள், நிறைவேறாத ஆசைகள் - எல்லாவற்றையும் தாங்க நம்மை விட ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கைதான் அவர்களை வழி நடத்துகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

Velankanni Basilica

நாங்கள் எங்களுடைய வண்டிக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அங்கிருந்த இலவசத் தங்கும் விடுதிக்காக மேலும் கீழுமாக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் உடையையும் பேச்சையும் பார்க்கும்போது, எங்கோ ஆந்திராவில் உள்ள கிராமத்திலிருந்து வந்தவர்கள் போல் இருந்தார்கள். அவர்களுடன் வந்திருந்த சிறு குழந்தைகள், “அம்மா, ஐஸ் வாங்கித் தா” என்று கேட்டு படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கேற்றாற்போல, ஐஸ் விற்கிறவரும் அவர்கள் முன்னாடியே ஐஸ் வண்டியை நிறுத்திவிட்டார். அவர்களுடைய அம்மாவோ சில முறை மறுத்துப் பார்த்தார்; முடியாதபோது, ஐஸ் வாங்கிக் கொடுத்தார். அங்கே நடுவதற்காக பெரிய தென்னங்கன்று ஒன்றை கையில் வைத்திருந்தார்கள். சிறு சிறு பொட்டிகள், முடிச்சுப் போட்ட கட்டப்பை, சிறிதும் பெரிதுமான பொட்டலங்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது, “இவர்கள் எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்” என்று தோன்றலாம். இவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டதால் அவர்களுடைய நிலையில் என்ன மாற்றம் நிகழும்? இந்த மாதிரி அங்கே ஒரே மனித வெள்ளம். அவர்கள் ‘பென்ஸ்’ காருக்கும், ‘ஐ-போனுக்கும்’ வேண்டிக்கொள்பவர்கள் போல் இல்லை. அன்றாடத் தேவைகளே கடவுளை வேண்டினால்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தால், என்ன சொல்வது?

“வசதி இல்லாதவர்கள் ஏன் கோயிலுக்குச் சென்று நேரத்தையும், இருக்கும் சொற்ப பணத்தையும் வீணாக்க வேண்டும்? ஏன் தேவையில்லாத வேண்டுதல்களைச் செய்து, அதை நிறைவேற்ற வாழ்க்கையுடன் போராட வேண்டும்?” என்று பல முறை யோசித்திருக்கிறேன். “கோயில்கள் எல்லாம் பணக்காரர்களுக்குத்தான், மற்றும் அவர்களுடைய பொழுது போக்குவதற்குத்தான்” என்றும் நினைத்திருக்கிறேன்.

அந்த மாதிரி சிந்தனைகள், எண்ணங்கள் எல்லாம் சரி இல்லையோ என்று இப்போது தோன்றுகிறது. கோயிலுக்குச் செல்வதும், வேண்டுதல்களை நிறைவேற்றுவதும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. வசதி இல்லாதவர்கள் மனதில் என்ன மாதிரி சிந்தனைகள் ஓடும்? சமூகமும், சர்க்காரும் எங்களுடைய நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்யாதபோது, எங்களிடம் இருக்கும் மிச்ச மீதியையும் பல வழிகளில் பிடுங்கிக் கொள்ளும்போது, எங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும்போது, அதைச் சமூகம் கண்டும் காணாதது போல் இருக்கும்போது, எங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? எங்கள் குடும்பங்களுக்கு யார் உத்தரவாதம் தரப் போகிறார்கள்? பிரார்த்தனையை விட எங்களுக்கு என்ன வழி? அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே எங்களின் ஊன்றுகோல் என்கிற மாதிரியான எண்ணங்கள்தான் என்று நினைத்துக்கொண்டோம். கோயில் பயணம், வசதி இல்லாதவர்களுக்கு, ஒரு புது உற்சாகமும் நம்பிக்கையும், நல்ல எதிர்பார்ப்பையும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திராணியையும் கொடுக்கிறது என்றேத் தோன்றுகிறது.

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், நிறைய பேரால் மனம் விட்டு சிரிக்க முடிகிறது என்றால், நமக்கு என்ன கேடு, சிரித்தபடியே பிரச்னைகளை எதிர் கொள்வதற்கும், வாழ்க்கையை அனுபவிப்பதற்கும்?

எனக்கு மாதா கோயில்களில் மெழுகுவர்த்தி ஏற்றுவது ரொம்பப் பிடிக்கும். எங்களுக்காக மட்டுமல்லாமல், மற்ற சில நபர்களுக்கு, அறிமுகமானவர்கள், அவ்வளவாகத் தெரியாதவர்கள் - அவர்களின் நல்வாழ்க்கைக்காக, அவர்களின் துயர் துடைப்பதற்காக, இங்கும் மெழுகுவர்த்தி ஏற்றினேன். எங்களால் மற்றவர்களுக்காக என்ன பெரிதாகச் செய்துவிட முடியும் என்று தெரியவில்லை; அவர்களைப் பற்றி ஒரு நிமிடமாவது நம் நினைவில் கொள்ளலாம் என்றேத் தோன்றிற்று. அதனால் அவர்களுக்கு என்ன பயன் என்று சொல்லத் தெரியவில்லை. “பிரார்த்தனை என்பது என்ன? எனக்கு மட்டும் என்று இல்லாமல், பிறர் நலனுக்காகவும் என்னால் சில மணித் துளிகளைச் செலவு செய்து, அதன் மூலமும் சந்தோஷம் அடையலாம்” என்பதும் ஒரு வகையான பிரார்த்தனை. எங்களுக்குள் மனது லேசாகிப்போன மாதிரி ஒரு ‘ஃபீலிங்’.

Next stop: யாரும் வருவார் யாரும் தொழுவார் ……