மாயவரம் மறுபடியும்
ஸ்வாமி - மயூரநாதர். அம்பாள் - அபயாம்பிகை.
மீண்டும் மாயவரம் வந்து சேர்ந்தோம்.
மாயவரம் அல்லது மாயூரம் என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என்று நினைக்கிறேன். டின்னெவெலி , த்ரிசினோபோலி, திரிஞ்சிக்கனம் (திருக்கழுக்குன்றம்) என்றெல்லாம் ஆங்கிலேயர்கள் வாயில் நுழைந்த, கடித்து குதறப்பட்ட பல்வேறு இடங்களின் பெயர்கள். அந்த ஊர்களுக்கெல்லாம் ஆங்கிலேய பெயர்களை நீக்கி விட்டு நம்மூர் பெயர்கள் வைத்ததுபோல், மாயவரத்திற்கும் இப்பொழுது மயிலாடுதுறை என்று பெயர்.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். இந்தக் கோயில் காசிக்குச் சமம் என்று கருதப்படுகிறது. பார்வதி “ஒரு முறை பெண் மயிலாகக் கடவது” என்று சிவனால் சபிக்கப்பட்டார். பிறகு, அவர் மைலாப்பூரிலும், மாயவரத்திலும் சிவனை வணங்கி, சாப விமோசனம் பெற்று அபயாம்பாள் ஆகக் காட்சி தருகிறார்.
இந்தக் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரம் ஒன்பது மாடி கட்டட உயரத்தில் உள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள குளத்தில் ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கங்கை மற்றும் காவேரி ஆகிய நதிகளின் நீர் கலந்திருப்பதாக ஒரு நம்பிக்கை. ஆகவே அன்று இதில் ஸ்நானம் செய்தால் பெரும் புண்ணியம் என்று கருதுகிறார்கள். இதை துலா ஸ்நானம் என்று சொல்கிறார்கள்.
மயூர நாட்டியாஞ்சலி விழா என்கிற நம் பாரம்பரிய நடன விழா ஆண்டுதோறும் நடக்கிறது.
அம்பாள் ஒரு ‘கெத்துடன்’ இருப்பதாகப்பட்டது, இந்த ஊர்க்காரர்கள் மாதிரி! நல்ல பெரிய கம்பீரமான சிற்பம். இந்தக் கோயிலும் இன்னும் ஐந்து பிற கோயில்களும் காவிரி நதிக்கரை ஓரமாக உள்ளன. இந்த ஆறு கோயில்களும் தனித்தனியாக ஒவ்வொவொன்றும் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சமம் என்று கருதப்படுகின்றன. பராமரிப்பு சுமார்தான். நிறைய பேர் வருவதில்லை போலும். ஊர் நடுவில் இருந்தாலும், பெரிய கும்பல் இல்லை. பத்மாவின் அம்மா இந்தக் கோயிலுக்கு அவர் வீட்டிலிருந்து, சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம், சிறு வயதில் அடிக்கடி நடந்தே வந்ததாகச் சொல்லியிருக்கிறார். நாங்கள் சென்றிருந்த சமயத்தில், ஓர் அறுபது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ‘கோட்-சூட்’ உடன் ‘டை’ கட்டி (கையையும் கட்டி) வந்திருந்தார். நிறைய வயதானவர்கள் உற்சாகத்துடன் கோயிலுக்கு வந்திருந்தார்கள். ‘சீரியல்’ பார்த்துக் கொண்டு வீட்டில் அழுவதை விட ‘பெட்டர்’ என்று தோன்றியது.
கோடைக்காலம் ஆனதால் எங்கே பார்த்தாலும் வாசனை வீசும் மல்லி! ஆசை தீர வாங்கினோம். முழம் பத்து ரூபாய். சில இடங்களில் அதற்கும் கம்மிதான்.
கோயிலில் பூஜை செய்யும் நிறைய அர்ச்சகர்களுக்கு (சிலரைத் தவிர) ஸ்தல புராணமோ அல்லது எதாவது சிறப்பு அம்சங்களோ தெரியாமல் இருந்தது வருத்தமாகத்தான் இருந்தது. கோயிலைப் பற்றி என்ன கேள்வி கேட்டாலும் பொத்தாம் பொதுவாக “ஆயிரம் வருஷம், சோழர் காலம்” என்ற ஒரே பதில். “செய்யும் தொழிலே தெய்வம்” என்று சொல்வார்கள். தெய்வத்துக்கு அருகிலேயே இருந்து செய்யும் வேலையில் கூட ஸ்ரத்தை இல்லாமல் இருக்கிறார்களே என்று வருத்தப்பட்டோம்.