மதுரைவீரன்

ஸ்வாமி - மதுரைவீரன். துணைவியர்கள் - பொம்மி & வெள்ளையம்மாள்

தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டை கீழ வழுத்தூர் என் தந்தை பிறந்த ஊர். கீழ என்று இங்கு சொல்வது கிழக்கைக் குறிக்கிறது. மேற்கு பக்கம் இருக்கும் வழுத்தூரை மேல வழுத்தூர் என்று சொல்கிறார்கள். ‘தில்லு முல்லு’ சினிமாவில் வரும் “அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்” என்கிற கேரக்டர் ஞாபகத்திற்கு வருகிறதா? எனிஹௌ எனக்குத் தனி ஈர்ப்பு.

நாங்கள் குலதெய்வமாக வழிபடும் “மதுரைவீரன்”, மனிதராகப் பிறந்து, தான் செய்த நல்ல செய்கைகளினாலே, கடவுளாக வழிபடப்பட்டாரோ என்று தோன்றுகிறது. இவர், சங்கிலிக்கருப்பன், அய்யனார் ஆகியோர் எல்லோருமே இதே மாதிரி தெய்வங்கள்தான். கிரேக்க சமூகத்தில் ஹெர்குலஸ், அகிலஸ் போன்றவர்களை போல - demi gods!

ஒருவர் தஞ்சாவூர்க்காரரா இல்லையா என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அறுபது, எழுபது என்று வரிசையாகச் சொல்லச் சொல்லுங்கள். அடுத்த வார்த்தையை எண்பது என்று சொல்லாமல் எம்பளது என்று சொன்னால், அவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்தான் என்பதில் சந்தேகமே இல்லை! 😉

Maduraiveeran

காவிரியில் இருந்து பிரிந்து வரும் குடமுருட்டி ஆற்றிலிருந்து சுமார் நூறு மீட்டர் அருகில் என் தந்தையார் பிறந்து வாழ்ந்த வீடு. அந்த வீட்டை ஓர் இஸ்லாமியக் குடும்பம் வாங்கி இப்போது வசித்து வருகிறார்கள். நாங்கள் அங்கு செல்லும்போதெல்லாம் வந்து அன்போடு விசாரிப்பார்கள். ஆனாலும், அந்தத் தெருவில் ஓர் இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. ஒரு சமூகவியல் ஆராய்ச்சிக்கு உகந்தது, இந்த இடமும் அங்கு நிலவும் பனிப்போரும். அந்தத் தெருவிற்கு இரண்டு பெயர்கள்; ஓர் இந்துப் பெயர், ஓர் இஸ்லாமியப் பெயர். ஒரு குழந்தைக்கு இரு வீட்டார் பெயர் வைப்பது போல! பெரும்பான்மையான இந்துக்களின் கருத்து என்னவென்றால், எல்லாவற்றையும் இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள்; எங்கள் ஊர் எங்களை விட்டுச் சென்றுவிட்டது என்பது. நாம் கிராமங்களை விட்டு நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட பின், அங்குள்ள சூழ்நிலையை விவாதிப்பது வெறும் வெட்டிப் பேச்சு. Brain drain என்பது வெளிநாடுகளுக்குச் செல்வது மட்டும் அல்ல;

என் தந்தையார் வசித்த தெரு:

VillStreet

என் தந்தையாரின் கிராமம் இப்பொழுது:

Vill

internal migration is also a brain drain and is a dampener on the development of our villages - I guess it’s a cycle.

இந்த மனிதர் இன்னும் இங்கேயே இருந்து கொண்டு வேலை செய்கிறார்:

OldMan

மற்றும் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், எதோ இந்துக்களின் நாடாக இது இருந்தது போலவும், அந்நியர் ஊடுருவல் போன்ற எண்ணங்களை வீணாக வளர்த்துக்கொண்டு உள்ளார்கள். இஸ்லாமியர்களும் தொன்றுதொட்டு இதே ஊரில் இருந்தவர்கள் என்ற உண்மையை, வரலாறு அறியாதவர்கள், அறிந்துகொள்ள விரும்பாதவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அதே அவர்கள் பிள்ளைகள் USA, UK - யில் இருப்பதை மட்டும் பெருமையாக ஊருக்கேப் பறைசாற்றுவார்கள். அது ஊடுருவலில் சேராது அல்லவா? இவ்வாறு, இந்துக்களும் இஸ்லாமியர்களும் அடுத்தடுத்து வாழும் தெருக்களில், ஒளிவுமறைவாக நட்பும் காதலும் இல்லாமலா போகும்? இயற்கைக்குப் புறம்பாக எதையாவது அழுத்தி வைத்தால், அது ஒரு நாள் வெடிக்காமலா போகும்? “மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்” என்ற சினிமாப் பாட்டு வரிகள் ஏனோ நினைவில் வந்தன!

As a side note.

இஸ்லாமியர்கள் சுமார் ஏழாம் நூற்றாண்டில் வியாபாரத்தில் இந்தியாவுடன் ஈடுபட்டிருந்தினர். அவர்கள் தங்களுடைய மதத்தைத் திணித்ததற்கானச் சான்றுகள் அவ்வளவாக இல்லை என்று நாம் அறிகிறோம். எனவே, இந்நாடு அவர்களுக்கும் நமக்கும் சொந்த நாடாகத்தான் இருந்திருக்கிறது. எங்களது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பொதுவாக அனைத்து மதத்தினருடன் ஒன்றாக எந்த வித வேறுபாடும் இன்றி சந்தோஷமாக இருந்து வந்தோம். இப்பொழுது இருக்கும் சூழலில் வேறு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பது சுலபமாக இல்லை, மேலும், சில கல்வி நிறுவனங்கள் மற்றும் வீட்டு சொசைட்டிகள் சில சமூகத்தினரைச் சேர்த்துக் கொள்வதில்லை; அப்படியே இருந்தாலும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களின் சமூக மற்றும் சில விஷயங்களில் சரியான புரிதல் இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. முன்னூறு வருடங்கள் ஆங்கிலேயத் தாக்கத்தினால், நமது கலாச்சாரம், மொழி போன்றவைகளில் பலவிதமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆங்கிலேயர் விட்டுச் சென்ற மொழியினைப் பேசுவதிலும், அவர்களைப் போல் உடுத்துவதிலும் இன்னும் பெருமை கொள்ளும் நாம், இஸ்லாமிய தாக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் வேறாக பார்க்கிறோம். நம்மை பிரெஞ்சுகாரர்கள் மற்றும் போர்த்துகீஸ்காரர்கள் ஆண்ட இடங்களில் அவர்களின் தாக்கத்தைப் பார்க்கிறோம்.இன்றைய திருமணங்களில் கண்டிப்பாக ரூ. 30,000 க்குக் குறையாத “ஒரு நாள் மட்டுமே” பயன்படும் “லெஹங்கா”; ரிசப்ஷன் சாப்பாட்டில் “பன்னீர் பட்டர் மசாலா” மற்றும் “பான்”, சடங்குளில் “மெஹந்தி” “ஹல்தி” மற்றும் “சங்கீத்” என்ற வட நாட்டு சங்கதிகள் எல்லாம் இடம் பெறுகின்றன. நாம் அன்றாடம் பேசும் மொழியிலும், பாட்டு நடனம் இலக்கியம் போன்றவைகளிலும் நாம் அதிகம் விரும்பும் உணவு பொருட்களான சமோசா, பிரியாணி, குலாப் ஜாமுன் போன்றவைகளில் தாக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இவை இஸ்லாமிய உலகம் நமக்கு அளித்த அன்பளிப்புகள். ஹிந்துக்கள் முந்தைய காலங்களில் தையல் செய்யாத அங்கிகளை அணிந்திருந்தார்கள், புடவை, வேஷ்டி, அங்கவஸ்திரம் இத்யாதி. தையல் கலையை இங்கு கொண்டு வந்த பெருமை இஸ்லாமியர்களையேச் சாரும் என்று ஒரு சாரார் கருதுகிறார்கள். மேலும், வாலாஜாஹ் நவாப் தனது ஆட்சிக் காலத்தில், கபாலீஸ்வரர் கோயில் குளத்திற்கான இடத்தையும், ஸ்ரீரங்கத்தில் நவாப் தோட்டம் என்று நந்தவனத்திற்கான இடத்தையும் அளித்ததாகவும் தகவல் அறிகிறோம். ஒரு நவாப் தன்னுடைய நாணயங்களில் ஒரு பக்கம் தன்னுடைய முத்திரையையும், மறுபக்கம் இந்துக் கடவுள்களின் உருவங்களையும் பதித்து இருந்தார் என்றும் பார்க்கிறோம். எனவே, ஒன்றாக வாழ்ந்து வந்ததில் எல்லோரும் செழித்தனர் என்பதில் ஐயம் இல்லை; என்ற போதும், இன்று சண்டையையும் பூசலையும் உண்டு பண்ணி, பிளவுகளைப் பெரிதுபடுத்த நம்மில் பலர் அச்சப்படுவதில்லை. எதோ இவர்கள்தான் இந்து மதத்தின் காப்பாளர்கள் போல - யாருடைய தயவும், மேல் பார்வையும் இல்லாமல் இந்த மதம் இத்தனை வருடங்களாக இருந்திருக்கிறது என்பது நிஜம் அல்லவா? சற்றே சிந்தித்தார்கள் என்றால் புரிய மனம் கொண்டவர்களுக்கு இது புரிய வாய்ப்பு இருக்கிறது!

எனது அம்மா, தனக்குத் திருமணமான புதிதில், வீட்டிலிருந்து தினமும் காவிரிக் கரைக்குச் சென்று, துணி துவைத்து, பிறகு தண்ணீர்க் குடம் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருவது பற்றி எங்களிடம் நிறையச் சொல்லியிருக்கிறார். வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் நடந்திருப்பார்கள் என்று நினைத்தபோது, அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை நிலையை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதிலிருந்து எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம், ஒரே தலைமுறையில் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. நிறைய முன்னேறிவிட்டோம்: வாழும் சூழ்நிலை, சௌகரியங்கள், படிப்பு, ஆரோக்கியம், தொழில்நுட்பம், நீண்ட ஆயுள் ஆகிய எல்லாவற்றிலும். என்ன, இந்த முன்னேற்றமெல்லாம் சமூகத்திலுள்ள எல்லோரையும் அடையவில்லை என்பதும் வருந்தத்தக்கது. இந்தக் காலத்தின் பாதிப்பு இல்லாமல் சிலர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்! உதாரணம், எங்கள் வழுத்தூர் வீட்டிற்கு அருகில் ‘பாப்பா’ என்கிற பெண்மணி. பாப்பாவிற்கு உறவினர்கள் சென்னையிலும், பெங்களூரிலும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர் இங்கே தனித்தே இருக்கிறார். அவர்தான் எங்களை ஒரு “கைட்” போல அருகில் உள்ள எங்கள் குலதெய்வமான மதுரைவீரன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் - எதையும் எதிர்பார்க்காமல், தனது கடமையைப் போல. அவசரமான நகர வாழ்க்கை நம்மை ரொம்பவும் selfish ஆக மாற்றிவிட்டதோ? இதுபோன்ற சிறிய உதவிகளைக் கூட மற்றவர்களுக்காகச் செய்வோமா, எதற்கும் நேரமில்லாமல்?

Ernest Hemingway கூறுவது போல… The city folks always have a steamer to catch.

எளிமையான வாழ்க்கை; இருப்பதை ஏற்றுக்கொண்டு, எதிர்பார்ப்புகள் நிறைய இல்லாமல் இருக்கும் பாப்பா போன்றவர்கள் ஒரு பக்கம்; காசு, வசதி, பதவி என எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் எதையோ தேடிக்கொண்டிருக்கும் சிலர் - இந்த ஓட்டத்தில் நாம் எங்கிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது!

எனது தந்தையின் குடும்பம் சுத்த சைவம். மதுரைவீரனுக்கோ ஆடும், சாராயமும்தான் படையல். எப்படி மதுரைவீரன் எங்களது குலதெய்வம் ஆனார் என்பது சிறு வயதில் எனக்குச் சற்றே புரியாத புதிர். பிறகுதான் தெரிந்தது, அந்தக் கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும், பாகுபாடு இன்றி, மதுரைவீரன்தான் குலதெய்வம் என்று. மீனாட்சிதான் பிரதான தெய்வம். சங்கிலிக் கருப்பன், மதுரைவீரன் ஏனையோர் காவல் தெய்வம். இந்தக் குலதெய்வ விஷயத்தில் சில நல்ல விஷயங்கள் உண்டு. ஒரு கிராமத்தில் இருக்கும் அநேகருக்கு, அவர்களின் ஜாதி வித்தியாசங்கள் இல்லாமல், குலதெய்வம் ஒன்றே ஆக இருக்கிறது என்றே தோன்றுகிறது. குலதெய்வக் கதைகளும் நம்பகத்தகுந்த வகையிலே உள்ளன. அந்த ஊரில் திருட்டு, கொள்ளை ஆகியவை நடைபெறாமல் காத்துக்கொள்வதற்காக, காக்கும் கடவுள் ஊருக்கு எல்லையில் இருக்கிறார். ஆனால், சில சமயங்களில் குலதெய்வப் பெயரைச் சொல்லிப் பயமுறுத்துகிறார்கள். “குலதெய்வத்திற்கு ஏதாவது செய்யாமல் இருந்தால், ஏதேனும் கெட்டது நடக்கும்; அல்லது, இந்தக் கெட்டது நடந்ததற்குக் காரணமே, குலதெய்வத்தை உதாசீனப்படுத்தியதால்தான்” என்றெல்லாம். சில கோயில்களின் அருகே நடக்கும் அமோக வியாபாரங்களைப் பார்த்தால், இதெல்லாம் ஒரு பிசினஸ் என்றே தோன்றுகிறது. ‘பூச்சாண்டி’ காட்டி நம்முள் பயத்தை கிளப்பி விட்டு, அதில் குளிர் காயப் பார்க்கிறார்கள். இன்னும் சில ஜோசியக் காரர்களோ, மக்களை குலதெய்வம் hopping செய்ய வைக்கிறார்கள்.

நம்முடைய மூதாதையர்கள் ஊர் மற்றும் அவர்கள் நடந்து வந்த பாதைகளைப் பார்ப்பதிலும் ஒருவிதமான ஆவல் கலந்த ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. என் அம்மா நிறைய ஊர்க் கதைகளைப் பத்மாவிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன். மாற்று உலக்கையில் பொன்னா சித்தியுடன் சேர்ந்து ‘சின்க்ரோனைஸ்ட்’ ஆக நெல் இடித்ததும், ஒரே நெருப்புக் குச்சியில் அடுப்புப் பத்த வைத்ததும் (மாமியாரின் கட்டுப்பாட்டில் ஒன்றான ஒரே ஒரு நெருப்புக் குச்சி), நாள் முழுவதும் அடுப்பங்கரையை விட்டு வர முடியாமல், வெளி உலகமே பார்க்காமல், எல்லாவற்றுக்கும் பயந்து, யாரோ ஒருவரைச் சார்ந்து - அது மாமனாரோ, மாமியாரோ அல்லது கணவரோ, அவருடைய அண்ணன், தம்பி என்று - ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவ்வளவு அடிமைத்தனம்! நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

அந்தக் காலகட்டத்தில் இப்போது போல் சௌகரியங்கள் கிடையாது. வாசல் தெளித்துக் கோலம் போட்டு, விறகு அடுப்பில் பெரிய கூட்டுக் குடும்பத்திற்குச் சமைத்து (நாள்-கிழமைகள், நல்லது-கெட்டது என்றால் கூடுதல் வேலை), திடீர் திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் வரும் விருந்தினர்களை உபசரித்து, மாட்டுத் தொழுவத்தைப் பார்த்துக்கொண்டு, செக்கில் எண்ணெய், வெண்ணெய் திரட்டி எடுத்து, குங்குமம், மை ஆகியவற்றையும் வீட்டிலேயே செய்து, அப்பப்பா! “வீட்டைச் சுற்றி வேலை பார்த்தால், விரலைச் சொடுக்க நேரமில்லை” என்று என் அம்மா சொல்வது நினைவுக்கு வருகிறது. இப்படி எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து, அங்குள்ள ஆண்கள் சாப்பிட்ட பிறகுதான், பெண்கள் உண்ண உட்கார முடியும். உடுத்த, உட்கார, உண்ண, ஏன், தன் கணவருடன் பேசுவதற்கும் கட்டுப்பாடு. மாமியார் கொடுமை. எப்படி ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணுக்கு எதிரியாக இருந்தார்கள் - மாமியார் - மருமகள் பிரச்சினை இன்றுவரைக்கும் நீடிக்கிறது - அது முடிவே இல்லாமல் நீடிக்கும் என்றே தோன்றுகிறது. தினத்தந்தி ‘கன்னித்தீவு’ மாதிரி!

தான் யார் என்பதே மறந்திருக்கக் கூடுமோ; பிடித்தமான உணவு, பொழுதுபோக்கு என்று தன்னைப் பற்றிய சிந்தனைகளுக்குக்கூட நேரமில்லாமல் இருக்க வேண்டிய நிலை. ஆனாலும், அந்த வட்டத்திற்குள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்திக் கொண்டனர்.

நிறையக் கொடுமைகளைத் தாண்டி, ரொம்பத் தூரம் வந்துவிட்டது போல் ஓர் உணர்வு. நம்மால் இந்த வாழ்க்கைக்குத் திரும்ப முடியவே முடியாதோ? இப்படிப் பல யோசனைகள்! பாடகி ‘மடோனா’ மாதிரி ‘மெடீரியல் கேர்ள்’ (அல்லது ‘பாய்’) ஆகிவிட்டோமோ?

உபரியாக - ஒரு ‘ஃபிளாஷ்பேக்’.

நான் 1978-ல் ‘பி.யு.சி.’ முடித்தவுடன், என் தந்தையுடன் முதன்முதலாக ஒரு பெரிய ‘டூர்’ அடித்தது நினைவுக்கு வருகிறது. அப்போதெல்லாம் ஊருக்குப் போவது என்பது குதிரைக் கொம்புதான். அதனால்தானோ என்னவோ, இந்தப் பயணத்தைப் பற்றிய நிறைய விஷயங்கள் பசுமையாக ஞாபகத்தில் இருக்கின்றன. திருச்சியில் தொடங்கி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று, நிறைய இடங்களுக்கு ‘விசிட்’ அடித்தோம். என் தந்தைக்குத் திருச்சி ஊர் நன்றாகத் தெரிந்திருந்தது, எனக்குப் புதிதாக இருந்தது. அப்புறம் நினைவுக்கு வந்தது, என் தந்தை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘பி.ஏ.’ ‘கெமிஸ்ட்ரி’ படித்திருக்கிறார். பாதர் லீ (Father Leigh) என்கிற பேராசிரியர் கையொப்பமிட்ட பி.ஏ டிகிரி certificate பார்த்திருக்கிறேன். 1920-களில் எத்தனை பேர் ‘பி.ஏ.’ வரை படித்திருப்பார்கள்? அப்போதெல்லாம் ‘டிகிரி’ பரீட்சை ஒரு முறைதான் எழுத முடியுமாம். தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால், வெறும் ‘இன்டர்மீடியட்’தான். அதை ‘எஃப்.ஏ.’ என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த டூருக்கு முக்கிய காரணமே, நிறைய வருடங்களுக்கு முன்னால் செய்த வேண்டுதல்தான். நான் கைக்குழந்தையாக இருந்தபோது, என் தந்தையை பெரியம்மைத் தாக்கியது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில், அதிசயிக்கத்தக்க விதத்தில் பூரண குணமாகி, பிற்காலத்தில் அதன் சுவடே இல்லாமல் மீண்டு வந்தார். அந்த சமயத்தில் செய்த அம்மாவின் வேண்டுதலை நிறைவேற்ற, என் தந்தையும் நானும் மேற்கொண்ட பயணம் அது. அதன்படி, சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் என் தந்தை அங்கப்பிரதட்சிணம் செய்தார். நான் அவருக்கு உதவியாகப் பின்னாலேயேச் சென்றேன். அப்போது, சென்னை ‘டு’ திருச்சினாப்பள்ளி செல்ல ரயில் டிக்கெட் விலை ரூ.16. மாணவர் சலுகையுடன் ரூ.8. புகைவண்டி எஞ்சின்! இறங்கும்போது, புகைவண்டி கக்கும் கரியினால் போட்டிருக்கும் துணிகள் எல்லாம் கரி படிந்து பழுப்பாக மாறியிருந்தன.

அந்த டூர் இன் போது, திருச்சிக்குப் பிறகு, தஞ்சாவூர், கும்பகோணம், திருநாகேஸ்வரம், மாயவரம் அருகில் இளந்தோப்பு மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் சொந்தக்காரர்கள் வீட்டில் இரண்டு இரண்டு நாட்கள் தங்கி என்ஜாய் பண்ணினது இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

இன்னும் எங்கள் பயணம் தொடர்கிறது …

அடுத்ததாக …பெண்களைப் பிரதானமாக வைக்கும் கோயில்.