நெகபடாம்
ஸ்வாமி - காயாரோஹணஸ்வாமி . அம்பாள் - நீலாயதாக்ஷி.
நெகபடாம் என்று வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் அழைக்கப்பட்ட நாகப்பட்டினம்.
அழகான கடற்கரை, குட்டி மீனவத் துறைமுகம் கொண்ட ஊர். நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல், இரண்டுங்கெட்டான் இடம். மல்லிப்பூவும் கருவாடும் சேர்ந்து மணம் வீசுகிறது. ரசிப்பதற்கு ஒவ்வொன்றும் ஓர் ஈர்க்கும் வாசம். “மனம் இருந்தால் மார்க்கபந்து”, கமல் சொன்ன மாதிரி! நாகப்பட்டினம் என்ற பெயரே, ஆதிசேஷன் சிவனை வழிபட்டதால் வந்தது என்ற ஒரு வரலாறு உண்டு.
ஆழ்வார் பாசுரமும், துஆவும் ஒலிபெருக்கிகளில்! கபீர் சொல்லியிருப்பது தேவையில்லாமல் ஞாபகத்திற்கு வருகிறது: “கடவுள் என்ன காது கேட்காதவரா, ஏனிந்த வெளிப்பாடும் சத்தமும்?”
மற்றும் சீக்கிய குரு ஒருவரும் சொல்லியிருக்கிறார்:
“சாஹிப் சதா ஹதூர் ஹை கியா
ஒளசீ க்ரெஹி புக்கார்”
“கடவுள் நமக்குள்ளேயே எப்போதும் இருக்கிறார், அவரிடம் எதற்காக இப்படி சத்தம் எழுப்புகிறோம்?”
சரி, இப்போது இங்கே அமைந்திருக்கும் நீலாயதாக்ஷி கோயிலைப் பார்ப்போம்:
“உன்னை அல்லால் வேறே கதி இல்லை அம்மா
உலகெலாம் ஈன்ற அன்னை
என்னை ஒரு வேடமிட்டு உலக அரங்கில் ஆட விட்டாய்
என்னால் இனி ஆட முடியாது திருவுள்ளம் இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க
நீயே மீனாக்ஷி , காமாக்ஷி, நீலாயதாக்ஷி.”
“காயாரோகணேசம்” என்று பாடலில் இந்தக் கோயிலைப் பற்றி வருகிறது. ரொம்ப நிதர்சனமான உண்மை. இந்தக் கோவிலின் முகப்பு மற்ற கோயில்களை விட மிக வித்தியாசமாக இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது, இந்தக் கோயில் “லாகுலிசா” என்கிற குஜராத்தைச் சேர்ந்த சிவனை வழிபடும் ஒரு பிரிவினரால் கட்டப்பட்டது என்று. அங்கிருந்த தியாகராஜர் சிலை ‘லாபிஸ் லாஸுலி’ என்று சொல்லப்படுகிற கோமேதகத்தால் செய்யப்பட்டது.
சிவனின் பெயர் காயாரோஹண ஸ்வாமி. நீல நிறக் கண்ணுடைய அம்பாள். ஏனென்றால், அம்பாளின் கருணை கடல் போல் விசாலமானது, ஆகவேதான் நீல நிறக் கண்கள். இந்தக் கோயிலின் ‘ஆர்கிடெக்ச்சர்’ ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. ரொம்பப் பழைய கோயில். அமைதியாக, ரொம்பக் கூட்டம் இல்லாமல்… அம்பாள் சிலையை அமைத்தவர் ரொம்ப ரசிச்சு அழகாகச் செய்திருக்கிறார். மிகவும் நேர்த்தியான சிற்பம். நந்தியின் ஒரு கண் சிவனின் மேலும், மற்றொரு கண் அம்பாளின் மேலும் இருக்கிறது. இதை இரட்டைப் பார்வை என்று கூறுகிறார்கள். கண் கோளாறு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள், அவர்களின் குறை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்.
என்னுடைய மூத்த அக்காவின் பெயர் நீலா என்கிற நீலாயதாக்ஷி என்பதால், இந்தக் கோயிலுக்குள் நுழையும்போது ஓர் “ஆஹா” moment. என் பெற்றோர்கள் இந்தப் பெயரை என் அக்காவுக்கு எதனால் வைத்திருப்பார்கள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. Maybe because Dad was posted there?
அம்பாளின் ஐந்து வாழ்க்கை கால கட்டங்களில் இதுவும் ஒன்று.
- காசி விசாலாக்ஷி - குழந்தை.
- காஞ்சி காமாக்ஷி - சிறுமி.
- நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி - கன்னிப்பெண்.
- திருவாரூர் கமலாம்பிகை - இளம் மங்கை.
- மதுரை மீனாட்சி - திருமணமான பெண்.
இதில் ஓர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஹிந்து கோவில் அம்பாளான நீலாயதாக்ஷியும் கன்னிப்பெண்; அருகிலிருக்கும் கிறிஸ்தவ வேளாங்கண்ணி மாதாவும் கன்னிப்பெண். மதங்களுக்குள் என்ன பெரிய வித்தியாசம்? நமக்குள் ஏன் மதங்களை வைத்து வித்தியாசம் பார்க்கிறோம்?
கொசுறு:
ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் பெரிய சண்டை நடந்த இடம் நாகப்பட்டினம் என்று படிக்கிறோம்.
நாகப்பட்டினம் ஒரு காலத்தில் அலுமினியத்தில் செய்த ‘ட்ரங்க்’ பெட்டி தயாரிப்பில் புகழ் பெற்ற இடம். இப்போதும் சில கடைகளில் அத்தகைய பெட்டிகளை விற்பனை செய்கிறார்கள். இந்தக் கால கட்டங்களில் அத்தகைய கனமான, மற்றும் சுழல் சக்கரங்கள் இல்லாத பெட்டிகளை யார் வாங்குகிறார்கள் என்பது புரியாத புதிர்! இந்தப் பெட்டிகளைத் தூக்குவதற்கு “போர்ட்டர்"கள் கிடைப்பது குதிரைக் கொம்புதான்.
நிறைய வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. ஒரு பெண்மணி எழுதியிருந்தார்: தனக்கு கணவராக வாய்த்தவர், கல்யாணத்தின்போது, வரதட்சிணையாக, தங்கத்திற்குப் பதிலாக நாகப்பட்டினம் ‘ட்ரங்க்’ பெட்டி வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டாராம். ஏனென்றால் அப்போது தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.40; நாகப்பட்டினம் ‘ட்ரங்க்’ பெட்டி விலை ரூ.45! இன்றைய இளைஞர்களிடம் இதைச் சொன்னால், ‘பெருசு ஏதோ பெனாத்துகிறது’ என்று நினைப்பார்களோ?