நாச்சியார் கோயில்
தாயார் - வஞ்சுளவல்லி நாச்சியார். பெருமாள் - நறையூர் நம்பி.
இந்தக் கோயிலில் தாயார் பெயர் முதலில், அப்புறம்தான் பெருமாள் பெயர்!
திருமங்கை ஆழ்வாருக்கு விஷ்ணுவால் ‘பஞ்ச ஸம்ஸ்காரம்’ எனப்படும் மதத் துவக்கம் செய்வித்த இடம். இங்கிருக்கும் கல் கருடர், வெளியில் எடுத்துச் செல்லும்போது அதனுடைய எடை பல மடங்கு கூடும் என்பது நம்பிக்கை. இன்னொரு தென்கலை ஐயங்கார் கோயில், ஆகவே நிறைய தமிழ் மணம். நாங்கள் சென்ற பொழுது நடை சாத்தும் நேரம் ஆகிவிட்டது. நாங்கள் வெகு தொலைவிலிருந்து வருகிறோம் என்பதை எப்படியோ உணர்ந்த பட்டாச்சார்யார், எங்களை அழைத்துப் பெருமாள் தரிசனம் காண வைத்தார். இங்கும் அவர் ஸ்தல புராணம் சொல்லி எங்களை மகிழ்வித்தார். கருடரை முதலில் நால்வர்தான் தூக்கி வருவார்கள். வெளியே வர வர, எப்படி நால்வர் தூக்கி வரும் கருடரைத் தூக்குவதற்கு, முறையே 8, 16, 32, 64, 128 பேர் தேவைப்படுகிறார்கள் என்று நாம் முன்பே கேள்விப்பட்டிருந்ததை மிக அழகாக விளக்கிச் சொன்னார். திரும்பவும் சன்னதிக்கு வரும்போது, ஆட்கள் குறைந்துகொண்டே வருவார்கள். மீண்டும் சன்னதிக்குள் செல்கையில், வெறும் நான்கு பேர்தான் தேவைப்படுவார்களாம். எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஆனால், கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது!
கலியுகத்தில் ஆண்கள் பெண்களின் பேச்சை நிறையக் கேட்பார்கள் என்று ‘மகாவிஷ்ணு’ நினைத்தாராம். அதற்கு உதாரணமாகத்தான் இங்கு பெருமாள், தாயாரின் பேச்சைக் கேட்கிறாராம். உற்சவங்களின்போது நாச்சியாருக்குத்தான் இங்கு முதல் மரியாதை, சாப்பாடு முதற்கொண்டு எல்லாவற்றிலும். ஸ்ரீனிவாசர் தாயாரைப் பின்பற்றுவதோடு சரி. சன்னதியிலும் கூட, நாச்சியாருக்குத்தான் முக்கியத்துவம். விஷ்ணுவின் சன்னதி சற்றே ஓரத்தில்தான். மகாவிஷ்ணு ஓர் உதாரணப் புருஷனாக இருக்கலாம்!
“மகாவிஷ்ணுவே நேரில் வந்து சொன்னால்கூட, நாங்கள் அவ்வளவு சுலபமாக மாறிவிடுவோமா என்ன!”
என்று நம் ஆண் மகன்கள் கூறுவது காதில் கேட்காமல் இல்லை. 😉
நாச்சியார் கோயிலில் வெண்கலப் பாத்திரங்கள், குறிப்பாக, வெண்கலக் குத்துவிளக்குகள் மிகவும் பிரபலம். பெண்களின் திருமண சமயத்தில் இங்கே குத்துவிளக்கு வாங்குவது விசேஷம் என்று கருதப்படுகிறது. புகுந்த வீட்டில் புது மணப்பெண்ணை நன்றாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கைதான். அந்த விளக்கு மாதிரி நிமிர்ந்து நிற்க, அந்தப் புது மணப்பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்களோ என்னவோ? ஆளுயரக் குத்துவிளக்கு, சுமார் இருபது கிலோகிராம் எடையுள்ளது, பத்மாவும் விடாப்பிடியாக “இருபத்தைந்து வருட ஆசை” என்று ஒரே போடு போட்டு ஒரு விளக்கை வாங்கிவிட்டாள்! எமோஷனல் பிளாக்மெயில்! ஆனால், சும்மா சொல்லக் கூடாது - அது பார்க்க அழகாகத்தான் இருக்கிறது, எங்கள் வீட்டில். ஜோரான வேலைப்பாடு.
கும்பகோணத்தில் எதையும் வாங்காமல் தப்பித்து, அதற்கு ஈடாக இங்கு இதை வாங்கும்படி ஆனது!:
