நாகப்பட்டினம்
பெருமாள் - சௌந்தரராஜ பெருமாள். தாயார் - சௌந்தரவல்லி.
“சௌந்தர ராஜம் அஷ்ராயே கஜ ப்ருந்தாவன சாரங்கா வருட ராஜம்
நந்தா நந்தன ராஜம் நாகப்பட்டன ராஜம் சுந்தரி ராமராஜம் சுரவினுட மஹி ராஜம்.”*
“நான் யானைகளின் காட்டில் ‘கஜேந்திரனை’ காத்தருளிய சௌந்தரராஜனிடத்தில் தஞ்சமடைகிறேன். அவரே வரங்களை அள்ளி வழங்குவதில் ராஜா. சௌந்தரராஜன், நந்தனின் அருமை மகன்; நாகப்பட்டினத்தை ஆள்பவன்; அழகிய லக்ஷ்மியின் கணவன்; தேவலோகத்தினரால் புகழப்பட்டவன். அவனே இந்த பிரபஞ்சத்தை ஆள்பவன்.”
பிரிந்தாவன சாரங்கனைப் போற்றும் முத்துசாமி தீக்ஷிதர் இயற்றிய இந்தப் பாடல், அதே பெயருள்ள ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மிகவும் அழகான மற்றும் கம்பீரமான பெருமாள் கோயில். பட்டாச்சார்யார் மிகவும் ஸ்ரத்தையோடு ஸ்தல வரலாறு கூறினார். எங்களை “கீழே குனிஞ்சு பாதத்தை சேவிச்சுக்குங்கோ” என்று கூறினார். எந்த அளவுக்கு அவருக்கு தான் இருக்கும் இடத்திலும், செய்யும் வேலையிலும் ஈடுபாடு என்பது அவர் மெனக்கெடும் விதத்திலேயே கண்கூடாகத் தெரிந்தது. கோயிலுக்குச் செல்வது என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு வேண்டுதல் என்ற கட்டாயத்திற்காகவோ, புண்ணியத்தை அள்ளிக் கொள்வதற்காகவோ அல்ல; பிறகு என்ன என்று யோசித்தால் அதில் ஏதோ சொல்லத் தெரியாத ஒன்று; ஒரு கனெக்ட் - சில இடங்களில் அதை உணர்ந்தோம் - அந்த பட்டாச்சாரியார் சொன்ன விதத்தில் ஏதோ உண்மையான உணர்வுகள்; தன்னால் இயன்ற அளவில், தன் கோயிலுக்கு வருபவர்களுக்கு ஒரு தெய்வீக உணர்ச்சியை கொடுக்க genuine ஆக முயன்றது போல் இருந்தது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இந்தக் கோயிலைப் பற்றி விவரமாகக் கூறப்பட்டிருக்கிறது. தென்கலை ஐயங்கார் கோயில் என்பதால் தமிழ் மணம் கமழ்கிறது.


ஏதோ ஒரு வழியில் - கண்களுக்கும் செவிகளுக்கும் ஓர் இதமான அனுபவம். இன்னும் ஓர் அழகான விஷயம் என்னவென்றால், நகரங்களைத் தவிர மற்ற இடங்களில் நிறைய கோயில்களில் அர்ச்சனை செய்பவர்கள் மிக நேர்த்தியாக, ஸ்ருதி சுத்தமாக, அந்தந்தத் தெய்வங்களுக்கு உரித்தான ராகத்தில் பாடி அர்ச்சனை செய்வது ஒரு போனஸ்… சிட்டியில் அதற்கும் ஒரு ‘4ஜி ஸ்பீட்’ தான்! நகரங்களின் சௌகரியங்களுக்காக எதையோ தேடி, எப்போதும் ஒரு நேரமின்மையை அனுபவிக்கிறோமோ என்று தோன்றுகிறது! நகரங்களில் இருப்பவர்களுக்குக் கிராம வாழ்க்கை பிடிக்கிறது, குறுகிய ‘விசிட்’டின் போது. கிராமங்களில் இருப்பவர்களுக்கோ நகர வாழ்க்கையைக் கண்டு ஒரு மோகம். தூரத்துப் பச்சை!
முத்துசாமி தீக்ஷிதர் தன்னுடைய வாழ்நாளில் நிறைய கோயில்களுக்குச் சென்று, அந்தக் கோயில்களைப் பற்றிப் பல அழகான கீர்த்தனைகளை இயற்றி உள்ளார். ‘வாண்டர்லஸ்ட்’ அவரை பிடித்து ஆட்டுவித்ததோ என்னவோ?
முத்துசாமி தீக்ஷிதர் பற்றிப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது. சிறு வயதிலேயே ஒரு நாடோடி சாமியாருடன் நிறைய இடங்களுக்குச் செல்ல இவரை இவருடைய தந்தையார் அனுப்பி வைத்திருக்கிறார். ஆகவே, கிணற்றுத் தவளை போல் இல்லாமல், அவருடைய மனப்பான்மை பரந்து விரிந்து இருந்தது. ‘நோட்டுஸ்வரம்’ என்று சொல்லப்படும் ‘ஸ்டைல்’ அவருக்கே உரித்தானது. ‘செல்டிக்’ மற்றும் ‘பரோக்’ என சொல்லப்படும் ‘வெஸ்டர்ன் ஸ்டைல்’ தாக்கம் இவருடைய இசையில் அதிகமாகத் தெரிகிறது. ‘வெஸ்டர்ன் நோட்ஸில்’ நிறைய கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார். உதாரணமாக, “சக்தி ஸஹித கணபதிம்” மற்றும் “ஷ்யாமளே மீனாக்ஷி” ஆகியவை. “சந்ததம் பாஹிமாம், சங்கீத ஷ்யாமளே” என்கிற நோட்டுஸ்வரம், இங்கிலாந்தின் தேசிய கீதமான “காட் சேவ் தி கிங்” என்பதைத் தழுவியே இருப்பதாகச் சொல்கிறார்கள். சமஸ்கிருதத்தில் மட்டுமல்ல, ‘மணிப்பிரவாளம்’ என்கிற பாஷையிலும் எழுதியிருக்கிறார். இது சமஸ்கிருதம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய பாஷைகளின் கலவை ஆகும். ‘கட கட’ என்று பல பாஷைகளைக் கலந்தடித்துப் பேசுபவர்களை இதனால்தான் ‘ஒரே மணிப்பிரவாளம்’ என்று சொல்கிறார்கள் போலும்!
அச்சோ அழகியவா!!!
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் நாகப்பட்டினம் சௌந்தரராஜனைப் பற்றி “அச்சோ! அச்சச்சோ!!” என்கிறார். அப்படி மயங்க என்ன காரணம் என்று பார்க்கலாமா?
மயங்கிய ஆழ்வார் :-
திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக மாறி, இறைவனின் அழகைத் தோழியிடம் கீழேக் காணுமாறு விவரிக்கிறார். முதல் ஒன்பது பாசுரங்களில் திருநாகை திருத்தலத்தின் பெயரைக் குறிப்பிடாமல் “அச்சோ! ஒருவர் அழகியவா!” என்று பாடியுள்ளார். இறுதியான பத்தாவது பாசுரத்தில் மட்டுமே “நாகையழகியாரே” என்று இத்தலத்தைக் குறிப்பிடுகிறார். அந்தப் பாசுரம் பின்வருமாறு:
“அன்னமும் கேழலும் மீனும் ஆய
ஆதியை நாகை அழகியாரை”
அச்சோ அழகியவா :-
“பொன்னிவர் மேனி மரகதத்தின்
பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின் இவர் வாயில் நல் வேத மோதும்
வேதியர் வானவ ராவர் தோழி
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி
ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்
அச்சோ அழகியவா?!”.
விளக்கம்
பொன் போன்ற மேனியும், பொங்கி வழியும் ஒளியுடைய மரகதத்தை இடையினில் ஆரமாக அணிந்து, வாயினால் நல்ல வேதத்தை நவிலும் தேவரான இவர், என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். என் அல்குலைப் பார்க்கிறார். என் திரண்ட கொங்கையையும் விடாது பார்க்கிறார். இப்படிப் பார்க்கின்றாரே இவர், “இது எனது தாய்க்குத் தெரிந்தால், அவள் என்னை எப்படிப் பார்ப்பாளோ? என்ன சொல்வாளோ? என்று எனக்குப் பயமாக இருக்கிறது!” என்று தன்னை நாயகியாகப் பாவித்துக் கொண்டு, திருநாகையில் எழுந்தருளியுள்ள சௌந்தரராஜ பெருமாளிடம் மையல் கொண்டு நிற்கிறார் திருமங்கையாழ்வார்.
திருமங்கையாழ்வாரின் கற்பனையின் அழகை ரசித்து “அச்சோ இத்தனை அழகியவா” என்று நமக்கும் சொல்லத் தோன்றுகிறது.
இதில் வரும் சங்கீதத்தைப் பற்றிய தகவல்கள் எல்லாம் உபயம்: friends and Google ஆத்தா.
சின்ன வயசில் எனக்கு பாட்டு சொல்லி கொடுத்து, அதன் “மனபாரத்தை” சுமக்க முடியாமல், என் பாட்டு டீச்சர் வீட்டை விட்டு ஓடியே போய்விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கோளேன்.