தேரழுந்தூர்

பெருமாள் - தேவாதி ராஜா. தாயார் - செங்கமலவல்லி.

தேரழுந்திய ஊர் மருவி இந்தப் பெயர். பத்மா இதைப் பற்றி எங்கோ படித்திருந்ததால், சாயங்காலம் நேரம் ஆன பொழுதிலும், தொணதொணவென்று உயிரை எடுத்து இந்தக் கோயிலைத் தேடிப் பிடித்தாள். வடகலை ஐயங்கார் கோயில். விஸ்வரூப கிருஷ்ணன் சிற்பம் மிகப் பிரமாதம். சாதாரணமாக கிருஷ்ணனை குழந்தை பருவத்திலும், ஆலிலை கிருஷ்ணனாகவும் நிறைய பார்ப்போம். இது மிக வித்யாசமான ஆனந்தமான அனுபவம். கிருஷ்ணனைச் சூழ்ந்து கொண்டு நிறைய ஆடு மாடுகள். இந்தக் கோயிலைப் பற்றியும் நிறைய கதைகள் உள்ளன. எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

உபரிச்சர வாசு, ஓர் அரசன், நிறைய தவம் செய்து, பிரம்மாவிடம் தேரில் பறக்கும் சக்தியைப் பெற்றான். ஒரு முறை இந்த இடத்தின் மேலே பறந்து கொண்டிருந்தபோது, பறந்து கொண்டிருந்த தேர், தண்ணீரில் விழுந்து விட்டது. அதனால் அந்த தண்ணீர் தெறிக்கப்பட்டு, அருகில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்திய முனிவர்க்குத் தொந்தரவு ஆகிப் போனது. தேர் அழுந்தியதால், அந்த ஊர் “தேரழுந்தியூர்” என்று ஆனது.

இன்னொரு கதை என்னவென்றால், அந்த அரசன், முனிவர்களுக்கு எதிராக நடந்து கொண்டதால், “அவனுடைய தேர் இந்த இடத்திலேயே புதை படும்” என்று முனிவர்களால் சபிக்கப்பட்டான் என்பதாகும்.

மூன்றாவது கதை: அந்த அரசனுடைய ராணி, இந்தத் தலத்தில் இறங்கி அங்குள்ள விஷ்ணுவை சேவிக்க ஆசைப்பட்டபோது, அந்த அரசன் மறுத்தானாம். அதனால், தெய்வீகமாக அந்தத் தேர் அந்த இடத்திலேயே அழுத்தி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

எங்கள் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த ஒரு ஜெர்மன் நாட்டு இளைஞர் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அவரிடம் நாங்கள் கேட்டோம், “எதற்காக இந்தியாவிற்கு வருகை தருவதற்கு ஆவலாக இருக்கிறீர்கள்?” என்று. அதற்கு அவர் சொன்னார், “எங்கள் நாட்டில் வரலாறு என்பது அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இங்கோ அதற்கு நேர்மாறு. உங்கள் நாட்டில் ஒவ்வொரு கல்லிற்கும் பத்து கதைகள் சொல்கிறீர்கள். அவைகளைக் கேட்பதற்கே நன்றாக இருக்கிறது”.

கதைகள் சிலவற்றைக் கேட்டால், “இப்படி எல்லாம் மக்கள் இங்கு வாழ்ந்திருப்பார்களா!” என்று வியக்க வைக்கும். அவர்கள் கடவுளாக இல்லாமல், ‘நல்ல சமாரிடன்களாக’ இருந்திருப்பார்களோ?

இன்னொரு பக்கம், மகாபாரதம் படித்தால், அதிலுள்ள சண்டை, வன்முறை, சூது, வஞ்சகம் ஆகியவை உண்மை, வெறும் கற்பனை அல்ல என்றேத் தோன்றுகிறது. அவைகள் கற்பனையாகவே இருந்தால், அதன் ஸ்ருஷ்டிகர்த்தாவிற்கு, இப்படிக் கற்பனை செய்ததற்கும், அதைக் காலம் காலமாக நம் தேசத்தின் கதையாக சேர்த்தமைக்காகவும் கோடி நமஸ்காரம்.

நல்ல இருட்டாகி விட்டிருந்தது. எங்கள் வாகன ஓட்டுநர் எங்களைத் திடீரென்று ஒரு நிமிடம் மேலே பார்க்கச் சொன்னார். “பட்டுக்கரு நீலப் புடவை பதித்த நல் வைரம்” என்ற பாரதியாரின் வரிகள் உயிர்பெற்றது போல் அந்த வானம் ஜொலித்தது. நகரங்களில் உள்ள ‘லைட் பொல்யூஷனால்’ இதை நாம் அங்கே காண முடிவதில்லை. பாரதியாருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது போலும். நமக்கு உண்மையிலே சுதந்திரம் வரும் என்று தெரிந்துதான், “ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” என்றவாறு எழுதி விட்டாரே, DK பட்டம்மாள், அதை சுதந்திரம் கிடைத்த அன்று பாடுவதற்கு சௌகரியமாக!

அந்தக் காலத்தில் பட்டுப் புடவை எடுக்க சென்றால், நல்ல கருநீல பட்டுப் புடவையில் ஜரிகை சேலையை விரும்புவார்களாம்!

அடுத்தது தடுக்கி விழுந்தால் கோயில் இருக்கிற ஊர்!