திருக்கடையூர்

ஸ்வாமி - அம்ருதகடேஸ்வரர். அம்பாள் - அபிராமி.

“விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே?"

“எனக்கு மனம் இருக்கிறது, அவளை, வேதங்களில் சொல்லி இருக்கிறபடி வழிபடுவதற்கு என்னிடம் அந்த ராஜ பாதை இருக்கும்போது, நான் எதற்குப் பாவம் செய்து, பாழாய்ப்போன நரகக் குழியில் விழ வேண்டும்?”

இந்தக் கோயிலின் வரலாற்றைப் பார்ப்போம்:

அபிராமி அந்தாதி என்கிற இலக்கிய பொக்கிஷத்தைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம். இதை இயற்றியவர் அபிராம பட்டர். அவரது இயற் பெயர் - சுப்ரமண்ய ஐயர். இவர் திருக்கடையூர் கோயிலில் குருக்களாக இருந்தார். மற்றவர்கள் இவரைப் “பித்து பிடித்தவர்” என்று சொல்லுமளவளுக்கு அம்பாளின் மேல் ஆழ்ந்த பக்தியும் அளவில்லாத நம்பிக்கையும் கொண்டிருந்தார்.

ஒரு முறை சரபோஜி ராஜா அந்த கோயிலுக்கு வந்திருந்தபோது, “ஒரு சாதாரண கேள்வியைக் கேட்கிறேன். அதற்கு உம்மிடம் பதில் இருக்கிறதா என்று பார்க்கிறேன். இன்று என்ன திதி? கூறவும்" என்று கேட்டார்.

ராஜா ஏன் அந்தக் கேள்வியை, அதிலும் அந்தப் ‘பைத்தியக்காரனிடம்’ கேட்டார் என்று எல்லார் மனதிலும் கேள்விக்குறி. சுப்ரமண்ய ஐயருக்கோ, அம்பாளுடைய பிரகாசமான முகம் மட்டுமே தெரிந்ததால் “இன்று பௌர்ணமி” என்று சொல்லி விட்டார். உண்மையில் அன்று அமாவாசை. அந்தக் கால நடைமுறையின்படி, சுப்ரமண்ய ஐயருக்கு, ராஜாவிடம் பொய்யான பதிலைக் கூறியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்று இரவு பௌர்ணமியாக இருந்தால், அதாவது, முழு நிலவு தெரிந்தால், தண்டனை ரத்தாகும். அமாவாசையின்போது முழு நிலவு தெரிவதாவது? தன்னுடைய அம்பாள் தன்னை ஒருபோதும் கைவிடமாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், ஒரு பெரிய பலகையை நூறு கயிற்றால் தொங்கவிட்டு, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். கீழே பெரிய நெருப்பு கனன்று கொண்டிருந்தது. அம்பாளின் மேல் ஒவ்வொன்றாகப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும், ஒவ்வொன்றாகக் கயிற்றை அறுத்துக்கொண்டு வந்தார். நூறு செய்யுளுக்குப் பிறகு, எல்லாக் கயிறும் அறுபடும். ஆகவே, அந்தப் பலகை கீழே விழும்போது, சுப்ரமண்ய ஐயரும் சேர்ந்து நெருப்பில் விழுந்து மாள்வார். ஆனால், தன் தீவிர பக்தனின் பாடல்களால் மெய் குளிர்ந்த அன்னை அபிராமி, எண்பதாவது பாடல் முடியும் முன்னரே, அங்கு தோன்றி, தனது மூக்குத்தி ஒன்றை வானத்தில் வீசி எறிந்ததாக நம்பப்படுகிறது. அந்த மூக்குத்தியும், அதில் இருந்த வைரமும், முழு நிலவு போல் வானத்தில் தென்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சரபோஜி ராஜாவும், அங்கிருந்த மக்களும், “அம்பாளே அமாவாசை அன்று ஒரு முழு நிலவை வானத்தில் உருவாக்கி, அவருடைய உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்” என்று உணர்ந்து விக்கித்துப் போனார்கள். இவரைப் புரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக மிகவும் வெட்கப்பட்டனர். அதிலிருந்து அவரை எல்லோரும் ‘அபிராமி பட்டர்’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, அபிராமி பட்டர் என்கிற சுப்ரமண்ய ஐயர், அபிராமி அந்தாதியை முழுமையாக இயற்றி முடித்தார். அபிராமி அந்தாதியை உலகிற்கு அளிப்பதற்காக, கடவுளின் விளையாட்டாகவும் ஒரு சாரார் கருதுகிறார்கள்.

அபிராமி அந்தாதியைப் பொறுமையாக, ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு பக்தி ரசத்தையும், இலக்கியச் சுவையையும் அள்ளித் தரும் என்பதில் ஐயமே இல்லை. ஒவ்வொரு செய்யுளின் கடைசி வார்த்தையும், அடுத்த செய்யுளின் முதல் வார்த்தையும் ஒன்றே. அது மட்டுமல்ல, அது ஓர் ‘இன்பினிட் லூப்’ கூட. அதாவது, முதல் செய்யுளின் முதல் வார்த்தையும், கடைசி செய்யுளின் கடைசி வார்த்தையும் ஒன்றே. எப்படித்தான் அந்த மாதிரி ஒருவர் கற்பனை செய்து எழுத முடியும், அதுவும் மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டு, என்று நினைத்துப் பார்த்தால், மயக்கமே வரும்! ஏனைய அந்தாதிகள் இருந்தாலும், அபிராமி அந்தாதியே முதன்மையானது என்று கருதப்படுகிறது.

அபிராம பட்டர் அவர்களின் கவிதைக் கடலில் சற்றே மூழ்கலாம்.

அபிராமி அந்தாதியை அர்த்தம் புரிந்து கொண்டு படித்தால் ஆச்சரியமாக இருக்கும்! அந்த அளவுக்கு அம்பாளின் அழகையும் அங்கங்களையும் (without being unnecessarily prudish- I feel we, as a culture, were more open to talking and depicting sexuality - look at our own Sarangapani temple in Kumbakonam and of course the Konark- Enter British with their Victorian values of morality and that’s when I guess we started to become a more hush hush culture) அபிராம பட்டர் வர்ணித்திருக்கிறார்.

“கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
_பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூ
_திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
_முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

அபிராமித் தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்குப் பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும் நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.

அபிராமி அந்தாதியில் மொத்தம் 102 செய்யுள்கள் உள்ளன. முதலில் விநாயகரைப் பற்றிய காப்புச் செய்யுள். இறுதியில் பலன் கூறும் செய்யுள். இவை இரண்டையும் தவிர்த்து, அம்பாளைப் புகழ்ந்து நூறு பாடல்கள் உள்ளன.

அபிராமி பட்டர் ஒவ்வொரு பாடலிலும் அபிராமியின் அழகை, கருணையை, சக்தியைப் பலவிதமாக வர்ணிக்கிறார். தன் அறிவையெல்லாம் அம்பாளின் பாதத்தில் சமர்ப்பிக்கும் பக்தியின் உச்சத்தை அந்தாதியில் காணலாம்.

உதாரணமாக, 39 ஆவது பாடலில்,

“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கொடி குங்குமத் தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என் விழுத் துணையே.”

…. என்று அபிராமியின் நெற்றியில் இருக்கும் குங்குமப் பொட்டை, சூரிய உதயத்திற்கும், மாணிக்கத்திற்கும், செங்காந்தள் மலருக்கும், மின்னலுக்கும், குமுத மலருக்கும் ஒப்பிட்டு அழகைப் புகழ்கிறார்.

அபிராமி அந்தாதியை முழுமையாகப் படித்தால், அதன் இலக்கியச் சிறப்பையும், பக்திச் சுவையையும் நன்குணரலாம். அபிராம பட்டரின் கவிதைகள் அவர் அம்பாள் மேல் கொண்ட எல்லையற்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. அதுவே அவருடைய பிரார்த்தனையின் வடிவம். நாம் எந்த காரியத்தைச் செய்தாலும், அதில் முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்வதே பிரார்த்தனை என்று எனக்குப் படுகிறது. வெறும் சடங்குகள் பிரார்த்தனையாக ஆக முடியாது என்றே நினைக்கிறேன். இந்தக் கோயில் இப்போது ஒரு வியாபார ஸ்தலமாக ஆகிவிட்டது. அதன் உண்மையான முக்கியத்துவம் அந்த வியாபார இரைச்சலில் மறைந்து போயிற்று என்று நினைத்தால், மனதில் ஏதோ நெருடுகிறது.

நிறைய பேர் சஷ்டியப்த பூர்த்தியை இங்கு கொண்டாடுகிறார்கள். அதற்கு எவ்வளவு ‘டிமாண்ட்’ என்றால், மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே பதிவு செய்தால்தான் இடம் கிடைக்கும் என்கிறார்கள். அதே கோயிலில், அவ்வளவாகப் பிழைக்கத் தெரியாத ஒரு வைதீகர் இவ்வாறு கூறினார். அறுபது ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடுவது மேற்கத்திய வழக்கம். நம் வழக்கப்படி அறுபது சாந்தி என்றே கூறுவார்கள். அதாவது, அறுபது ஆண்டுகள் இந்த பூமித்தாய் நமக்கு இடம் கொடுத்ததற்காகவும், அதிலிருந்து நாம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டதற்காக நாம் கடவுளுக்குச் செலுத்தும் நன்றிக்கடனே என்றும் கூறி, நிறைய பேர் இதைக் கொண்டாட்டம் என்றே எண்ணிக் கொள்கிறார்கள். மார்க்கண்டேயனுக்கு சிவன் “என்றென்றும் பதினாறு வயது” என்று அருள் வழங்கி, காலத்தை வென்ற இடம் என்பதால், இங்கு சஷ்டியப்தபூர்த்தி செய்தால், தங்களுக்கு இன்னொரு அறுபது ஆண்டுகள் கிடைக்காதா என்ற நப்பாசையில் மனிதர்கள்!

இப்போது அதற்கு வெப்சைட் வேறு. அதில் லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். ஒரு நாள் பேக்கேஜ் ரூ.9,000 முதல் இரண்டு நாள் பேக்கேஜ் ரூ.52,000 வரை, வரிகள் உட்பட! அதற்கு மேலும் தட்சணை தட்டுகளில் பணம் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பயணச் செலவு, தங்கும் செலவு, சாப்பாட்டுச் செலவு, மற்றும் இதர செலவுகள் தனி. இங்கே இது மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது. அங்கிருந்த நிறைய குருக்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

குருக்களுக்கும் விளம்பரம் தேவைப் போலும். நிறைய வீடுகளில் இருந்த குருக்களின் பெயர்ப் பலகைகள், கோயிலில் இருந்த கடவுளின் பெயர்ப் பலகையை விட மிகப் பெரியதாக இருந்தன.

அடுத்தது ஏழரை பயம் கொண்டவர்கள் செல்லும் இடம்.